தமிழ்நாடு

கண்மாய் நீரில் வெள்ளை வெள்ளையாய் நுரை...! ஆலைக்கழிவுகள் கலப்பதால் அபாயம்....!

Malaimurasu Seithigal TV

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள அயன்பாப்பாகுடி பகுதியில் அமைந்துள்ள கண்மாய் 200 ஏக்கருக்கு மேல்  பரப்பளவு கொண்டதாகும். தற்போது இந்த கண்மாய் மூன்று நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் கண்மாயில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த கண்மாய் நிரம்பி வெள்ளக்கல் அருகே உள்ள மடையில் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கண்மாயில் அதிக அளவில் நிறைந்து காணப்பட்ட  ஆகாயத்தாமரை அகற்றப்படாததால், அதிலிருந்து  வெளியேறும் ஒருவிதமான பாசம் இன்று காலை கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீருடன் கலந்து வெள்ளை நுரை அதிகளவு தேங்கி வருகிறது. இதனால்  காற்றில் நுரை மிதந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுவதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

மேலும், இந்த நுரைக்கு காரணம் இப்பகுதியில் அதிகமான சலவை தொழிற்கூடங்கள் இருப்பதாலும்., அங்கிருந்து வெளியாகும் கழிவு நீர் கண்மாய் நீருடன் கலப்பதாலும்., கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து காணப்படுவதால் நுரை வருவதற்கு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

தொடர்ந்து அதிக அளவு வெள்ளை  நுரை வராமல் தடுப்பதற்கும்., போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை வேண்டும். கண்மாயில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்றி தண்ணீர் விரைந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.