தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி எங்கே? அதிமுக நிர்வாகிகளிடம் அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறை! 

தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உடன் தொடர்பில் இருந்த இரண்டு அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுளனர்.

Malaimurasu Seithigal TV

தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் தொடர்பில் இருந்த இரண்டு அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுளனர்.

அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.ஆனால் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யலாம் என்று போலீசாருக்கு அனுமதி அளித்தது.

இந்த தகவல் அறிந்தவுடன் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி விட்டார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர். தனிப்படை போலீசார் மதுரை, கோவை, கொடைக்கானல், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவர் மாறு வேடத்தில் அலைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு போலீசார் "லுக்-அவுட்" நோட்டீசும் கொடுத்துள்ளனர். தொடர்ந்து பலரும் தன்னை ராஜேந்திரபாலாஜி ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார்கள் கொடுத்து வருகின்றனர். அவர் மீது மொத்தம் 7-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினார்? என்கிற விவரத்தை விருதுநகர் மாவட்டக் காவல் துறை வெளியிட்டது.

இந்நிலையில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளை திருநெல்வேலி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் காவல் துறைக்கு அழுத்தம் கொடுக்கபட்டதாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாக போலீசார் அதிரடியாக களமிறங்கி உள்ளதாக தெரிகிறது.