தமிழ்நாடு

"அதிகாரம் என்னிடம் வரும்போது பேனா சிலையை உடைப்பேன்"  சீமான் எச்சரிக்கை!

Malaimurasu Seithigal TV

அதிகாரம் என்னிடம் வரும்போது, பேனா சிலையை இடிப்பேன் என சின்னாளபட்டி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில், நாம் தமிழர் கட்சி சார்பில், மலை இல்லையேல், மழை இல்லை என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி, தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, "ஸ்டாலின் அவர்களே, கல்லறை கட்டி விட்டீர்கள் பேனா வைப்பதையாவது மறுபரிசீலனை செய்யுங்கள். இப்போது அதிகாரம் இருப்பதால், பேனா சிலை வைப்பீர்கள். என்னிடம் அதிகாரம் வரும்போது, அந்த பேனா சிலையை இடிப்பேன். வீண் செலவு தான்" என பேசியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், மலை இல்லை என்றால், மழை இல்லை. நம் முன்னோர்கள் இயற்கையை நேசித்தார்கள். அப்போது இயற்கை இயற்கையாக இருந்தது. சூரியன், காற்று, நீர் இல்லாமல் நம்மால் வாழ முடியாது. பூமியை பாதுகாக்க கற்றுக் கொள்ளுங்கள். அது ஒரு அதிசயம். 5 ஆண்டுகள் எனக்கு ஆட்சியை  கொடுத்தால், தமிழகத்தை பசுமை போர்வையால் போர்த்தி விடுவேன். நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு பள்ளிக்கூட மாணவன் 10 மரக்கன்று நட்டு வளர்த்தால், செய்முறை (பிராட்டிக்கல்) மதிப்பெண் வழங்குவேன். அரசு வேலையில் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், 100 கோடி மக்களுக்கு தான் இங்கு குடிநீர் உள்ளதாக குறிப்பிட்ட அவர், தான் ஆட்சிக்கு வந்தால், குடிநீர் விற்பனை தடை சட்டம் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு பேராபத்து வர உள்ளதாகவும், தான் போதிக்கும் போது உங்களுக்கு புரியாது எனவும் கூறிய அவர், பாதிக்கும் போதுதான்  உங்களுக்கு புரியும் எனவும், இந்த சூழல் உங்களுக்கு வருவதற்கு முன்பு விழித்துக் கொள்ளுங்கள் எனவும்  மக்களை எச்சரித்தார். முன்னதாக, சின்னாளபட்டி பொன்விழா மைதானத்தில் கட்சி கொடியே ஏற்றினார். சீமான் பொதுக்கூட்டதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.