பா.ம.க. நிறுவனர் இராமதாசு, உச்சநீதிமன்றத்திலும் நீதி கிடைக்கவில்லை; காவிரி படுகை உழவர்களைக் காக்க, தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? அறிக்கை விடுத்துள்ளார்.
அதில், "காவிரி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு மலைபோல நம்பிக் கொண்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அந்த நம்பிக்கை சிதைந்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவை 15 நாட்களுக்கு ஒருமுறை கூட வேண்டும்; அவற்றின் முடிவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இன்று ஆணையிட்ட உச்சநீதிமன்றம், இதைத் தவிர்த்து காவிரி பிரச்சினையில் தலையிட விரும்பவில்லை என்று கூறிவிட்டது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியவாறு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டாலும் அதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டால், அதைக் கொண்டு கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற வேறு வழிகளே இல்லை என்ற நிலை தான் இப்போது ஏற்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "மத்திய அரசுக்கு கடுமையான அரசியல் அழுத்தத்தைக் கொடுத்து, அதன் வாயிலாக கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீரைப் பெற்று, காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற ஏதேனும் வழிகள் இருப்பதாக தமிழக அரசு கருதினால் அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். எந்த வாய்ப்புகளும் இல்லை என்று தமிழக அரசு கருதினால், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளரின் பொறுப்பற்ற செயல்...பெண்களை தவறாக சித்தரித்த இளைஞர்!!