தமிழ்நாடு

காவல் துறை அனுமதி மறுப்பு...கேன்ஷல் ஆன மேள தாளங்கள்...ஆனாலும் பாஜக சார்பில் தமிழக ஆதினங்களுக்கு வரவேற்பு!

Tamil Selvi Selvakumar

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி - தமிழ்சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய 9 தமிழக ஆதீனங்களுக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தமிழக ஆதீனங்களுக்கு பாஜக சார்பில் வரவேற்பு:

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று நடைபெற்ற காசி - தமிழ்சங்கமம் நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த ஆதினங்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு வகித்தனர்.

இந்நிலையில் வாரணாசியில் நேற்று நடைபெற்ற காசி - தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய 9 தமிழக ஆதீனங்களுக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், தமிழ் வளர வேண்டும், மத்திய அரசின் இந்த விழா தமிழை உயர்ந்த அளவிலை வைத்து பார்க்க கூடிய அளவிற்கு சிறப்பாக நடந்தது. ஒரு மாதகாலம் நடைபெற உள்ள விழாவில் பலர் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சி நமக்கு சிறப்புக்குரியதாக அமைந்துள்ளதாக தெரிவித்த அவர், மத்திய அரசுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

இதனிடையே, ஆதீனங்களுக்கு வரவேற்பு அளிக்க மேள தாள வாத்தியங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், காவல்துறை அதற்கு அனுமதி அளிக்காததன் காரணமாக காவல்துறைக்கும் வாத்திய கலைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.