தமிழ்நாடு

"பாஜக கூட்டணியில் இல்லை என்பதை தெரிவிக்கவே டெல்லி சென்றோம்" நத்தம் விஸ்வநாதன் பேச்சு!

Malaimurasu Seithigal TV

"பாஜக உடனான கூட்டணி என்பது இப்போது மட்டுமல்ல எப்போதும் கிடையாது. நாங்கள் டெல்லிக்கு சென்றது பாஜகவுடன் கூட்டணியில் அதிமுக இல்லை என்பதை தெரிவிக்க சென்றோம்" என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியுள்ளார். 

திண்டுக்கல் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பாக ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி மற்றும் கிளை செயலாளர்களுக்கான வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் கழக துணை பொதுச் செயலாளர்ருமான நத்தம் விஸ்வநாதன் அவர்கள் அதிமுக நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். 

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மக்களுக்கு எதுவும் செய்யாமல் வாய் விளம்பரங்களினாலே பெற்று விளம்பரங்களினாலே நாங்கள் அனைத்தையும் செய்து விட்டோம் என கூறி மக்களை ஏமாற்றி வருவது தான் திராவிட மாடல். மக்களை எப்படி திறமையாக ஏமாற்றுவது என்பதுதான்  திராவிட மாடல் ஆட்சி. உதவித்தொகைக்கும் உரிமை தொகைக்கு வித்தியாசம் தெரியாமல் அவர்கள் கூறி வருகின்றனர் எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதால் நமக்கு வாக்கு வங்கி அதிகரித்து உள்ளது. மாநில அரசு மீது மக்களிடம் எவ்வளவு எதிர்ப்பு உள்ளதோ, அதே அளவு மத்திய அரசிடமும் மக்களுக்கு எதிர்ப்பு உள்ளது.  நாங்கள் டெல்லிக்கு சென்றது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதை சொல்வதற்காகவே டெல்லி சென்றோம். எடப்பாடி மிகவும் துணிச்சலுடன் அம்மாவைப் போல் ஒரு முறைக்கு பலமுறை ஆழ்ந்த சிந்தனையுடன் பிஜேபியுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவு எடுத்தார்.  இப்போது மட்டுமல்ல எப்பொழுதும் பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்று உறுதிபட தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சுதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.