தமிழ்நாடு

" திராவிட மாடல் ஆட்சி எங்களுக்கு தேவையில்லை..! "

வருகிற ஜூலை மாதத்தில் தமிழக அரசை கண்டித்து சென்னையில் தனித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த  கூட்டத்திற்கு மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். இதில்,  மாநில பொதுச் செயலாளர் முத்து ராமசாமி மாநில பொருளாளர் நீலகண்டன் மாவட்ட தலைவர் லோகோ மணவாளன் மாவட்ட செயலாளர் பாலமுருகன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தின்  நிறைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச் செயலாளர் முத்து ராமசாமி கூறுகையில், 

கல்வித்துறை சார்பில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு  மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை  திட்டமிட்டபடி உரிய காலத்தில் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். அதே வேளையில், தமிழக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிக்க வேண்டும். இதற்கு தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி கடுமையான கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்கிறது என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து,  "தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து,  பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை ஆசிரியர்கள் கோரிக்கை செய்து தரவில்லை.  இதனை தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது", என்று கண்டனம் தெரிவித்தார். 

மேலும்,  ஏற்கனவே அறிவித்தபடி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக வருகிற ஜூலை மாதத்தில் தமிழக அரசை கண்டித்து சென்னையில் தனித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.  

அதோடு, திராவிட மாடல் ஆட்சி எங்களுக்கு தேவையில்லை. கலைஞர் ஆட்சிதான் எங்களுக்கு வேண்டும் என்றும்  தெரிவித்தார்.