தமிழ்நாடு

விழுப்புரம்: பிரசவம் ஆன பெண், குழந்தையுடன் வராண்டாவில் படுத்துக்கிடந்த அவலம்...!

Malaimurasu Seithigal TV

விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த தாய் நடைபாதை வராண்டாவில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விழுப்புரம் அருகேயுள்ள  முண்டியம்பாக்கம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது இந்த மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

இதில் கடந்த வாரம் புதன்கிழமை கூவாகம் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.

குழந்தையின் கைவிரல் இடுக்குகளில் சதை வளர்ச்சி இருந்துள்ளதால் குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில், படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்று மூன்று நாட்களே ஆன தாய் ராதிகா வராண்டாவில் படுக்க வைக்கப்பட்டுள்ளார். மேலும், தாயிடம் பால் குடிப்பதற்காக குழந்தையும் வராண்டாவிலே கிடத்தப்பட்டுள்ளது.

எந்த அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லாமல் தாய் மற்றும் குழந்தை வராண்டாவில் இருக்கும் காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி இது குறித்து கேட்டவுடன் படுக்கை ஏற்பாடு செய்து தந்துள்ளனர்.