நடிகர் விஜய்யின் 49-வது பிறந்த நாளை ஒட்டி, விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள சுந்தர விநாயகர் கோயிலில் விஜய்யின் புகைப்படம் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, வாலாஜா வன்னிவேடு நரிக்குறவர் காலனி குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்ற விஜய் மக்கள் இயக்கத்தினர், அங்குள்ள நரிக்குறவர் மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து, அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை வரவேற்கும் வகையில் நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி, ஆட்டம், பாட்டத்துடன் விஜய் பிறந்த நாளை கொண்டாடினர். அதேபோல் விஜய் பிறந்த நாளை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதையும் படிக்க : ”சாத்தான்குளம் வழக்கில் இதுவரை நீதிபதி நியமிக்கப்படவில்லை” - கண்ணீர் மல்க தெரிவித்த ஜெயராஜ் மகள் !
செங்கல்பட்டு மாவட்டம் மாண்டூரில் விஜய் பிறந்த நாளை ஒட்டி, 20 ஆட்டோக்கள் இலவச சேவை வழங்கினர். மாண்டூரில் இருந்து செங்கல்பட்டிற்கும், செங்கல்பட்டில் இருந்து மாண்டூருக்கும் இலவச ஆட்டோ சேவை வழங்கினர். அத்துடன் பயணிகளுக்கு இனிப்புகளையும் வழங்கினர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முதியோர் காப்பகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கேக் வெட்டி, நடிகர் விஜய் பிறந்த நாளை கொண்டாடினர். அத்துடன் அங்குள்ள முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதியம் அருசுவை உணவு வழங்கியதால், அங்குள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.