தமிழ்நாடு

மதுவிலக்கு: "எந்த கட்சியுடனும் சேர்ந்து போராட தயார்" வேல்முருகன்!

Malaimurasu Seithigal TV

பூரண மதுவிலக்கிற்காக எந்த கட்சியுடனும் சேர்ந்து போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்

அரியலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதை வரவேற்ற அவர்  தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நோக்கம் என தெரிவித்தார்.

மேலும் கள்ளசாராயம் விஷச்சாராயம்  அரசு விற்கும் சாராயம் என எந்த சாராயமும் ஒரு சொட்டு கூட தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை எனவும் அதற்காக யாரோடு வேண்டுமென்றாலும் சேர்ந்து கைகோர்த்து போராட தயாராக இருப்பதாகவும் பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட முன்னேற்ற கழகம் என தமிழகத்தில் இருக்கிற எந்த கட்சியுடனும் சேர்ந்து போராட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.  

மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளை அதிமுக, திமுக இரண்டு பேருமே பல ஆண்டுகளாக கூறி வருகிறார்கள் ஆனால் இதுவரையில் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளின் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஊழல் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய தண்டனையோ சொத்துக்களை பறிமுதல் செய்ததற்கான வரலாறு இல்லை என தெரிவித்த அவர் அரசியல் காரணங்களுக்காக மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லாமல் உண்மையிலேயே அதற்கான ஆவணங்கள் தரவுகள் இருந்தால் அதன் அடிப்படையில் இதை எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.  

குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல்  பட்டியலும் அதற்கான ஆதாரங்களும் எனது கையில் உள்ளது அதை வெளியிடப் போகிறேன் என்று பத்திரிகையாளர்களை அழைத்து கூறிவிட்டு எந்த இணையதளத்தை தட்டினாலும் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு  திமுகவின் முன்னாள் இந்நாள் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள் இது போன்ற மோசடி வித்தைகளை மோடியின் வாரிசாக இருக்கின்றவர்கள் காட்டக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.