தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருந்த கிராம நிா்வாக அலுவலா் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் என்பவா் மணல் கடத்தல் தொடா்பாக படுகொலை செய்யப்பட்டாா். இதனை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொலை சம்பவத்தை கண்டித்தும் கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் பணி பாதுகாப்பு சட்டம் அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினா்.