தமிழ்நாடு

ஆவின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு போட்ட முதல் உத்தரவே இதுதான்...விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்!

Tamil Selvi Selvakumar

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 


சென்னை அடுத்த அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள பால் பண்ணைகளில் கடந்த மூன்று நாட்களாக ஆவின் பால் வினியோகம் தாமதமாக நடைபெறுவதாக புகார் எழுந்ததையடுத்து, அம்பத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, ஆவின் டேங்கர் லாரி, பால் குளிரூட்டும் பகுதி, தர பரிசோதனை மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆவின் நிர்வாகத்தில் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று, பால் நேரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறதா? அதில்  என்னென்ன பிரச்சனைகள் உள்ளது, என்பதை தெரிந்து கொள்ளவேண்டி திடீர் ஆய்வு மேற்கொண்டதாக கூறினார். 

தொடர்ந்து, கடந்த 2 மாதமாக ஒப்பந்த தொழிலாளர்களின் விடுப்பினால் ஏற்படும் பால் வினியோக தாமதம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ஆவின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் போட்ட முதல் உத்தரவே, ஆவின் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்பது தான். எனவே, ஆவினில் இருக்கக்கூடிய ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் அதனை நிரப்புவது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தெரிவித்தார்.