தமிழ்நாடு

வேங்கைவயல் தீண்டாமை விவகாரம் : 1 பெண், 2 ஆண்...வெளியான அதிர்ச்சி தகவல்...!

Tamil Selvi Selvakumar

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் தீண்டாமை விவகாரத்தில்,  நீர்தேக்கத் தொட்டியில் கலக்கப்பட்ட கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவுகள் கலந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நீர் தேக்க தொட்டியில் கலந்த கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று தெரியவந்துள்ளது. கழிவுகள் கலந்த நீரை பகுப்பாய்வு மையம் பரிசோதனை செய்ததில் அது 3 பேருடையது என்று தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பகுப்பாய்வு முடிவின் அடிப்படையில் 11 பேரிடம் விரைவில் டி.என்.ஏ சோதனை நடத்தப்பட உள்ளது. 

இதனைதொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வாட்ஸ் ஆப் உரையாடலை வைத்து ஆயுதப்படை காவலர் உள்பட இரண்டு பேரிடம் சென்னையில் இன்று குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட உள்ளது. எனவே, குரல் பரிசோதனை, டி.என்.ஏ சோதனை முடிந்த பிறகு குற்றவாளிகள் யார் என்பது தெரியவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.