பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் சைக்கிளில் வந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றார்.
தொடர் விலை உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு, கட்டுமான பொருட்கள், மருந்து பொருட்கள் என அனைத்து விலை உயர்ந்து உள்ளது. அதேபோல் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என மக்கள் இந்த பேரிடர் காலத்தில் பாதிப்புகுள்ளாகி உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காக்க வேண்டியது மத்திய மாநில அரசின் கடமை, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும், சிலிண்டர் விலை இந்த அளவுக்கு உயர்ந்தால் சாமானிய மக்கள் எவ்வாறு வாழ முடியும். மத்திய மாநில அரசுகள் இரும்பு கரம் கொண்டு இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை.
உலகத்திலேயே பெட்ரோல்,டீசல் விலை அதிகம் உள்ள நாடு இந்தியா தான். மக்களுக்கு வருமானம் இல்லாவிட்டாலும், அரசுக்கு வரி வந்து விட வேண்டும் என நினைக்கிறார்கள். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் 44 ரூபாய்க்கும், டீசல் 42 ரூபாய்க்கு விற்க முடியும். அரசு லாபம் பெற வேண்டும் என வரியை மக்கள் மீது சுமத்த கூடாது.
கர்நாடகா அரசை தேமுதிக சார்பில் கண்டிப்பதாகவும், மேகதாதூவில் அணை கட்ட முடியாது என கூறினார். ஹைட்ரோ கார்பன் மற்றும் மீதேன் திட்டத்தை தமிழகத்தில் தேமுதிக அனுமதிக்காது எனவும், தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.