தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதம் தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
அதன்படி ஏற்கனவே 28 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 1053 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் 813 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1127 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.மேலும் 1150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளது, இதில் 1127 ஆவணங்கள் மனுதாரர் தரப்பிலும், காவல்துறை சார்பில் 23 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் 29 ஆம் கட்ட விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் இன்று துவங்கியது. இதில் மனித உரிமை வழக்கறிஞர் ஹென்றி டிபேன் இன்று ஆஜராகினார், கடந்தாண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சாட்சியம் அளித்த நிலையில் ஆணையம் குறுக்கு விசாரணை இன்று செய்ய உள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி டிபேன் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஆணையம் முன்பாக ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி திபேன் செய்தியாளர்களை சந்தித்த போது, குறுக்கு விசாரணைக்காக ஆணையம் முன்பாக ஆஜராக உள்ளேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக இன்னும் 400 பேரை விசாரணை செய்ய உள்ள நிலையில், ஆணையம் தங்களது விசாரணையை விரைந்து முடிவெடுக்க வேண்டும். ஆட்சியர், கண்காணிப்பாளர், துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவளித்த தாசில்தார்கள் விசாரிக்கப்படவில்லை.
ஆணையத்தின் விசாரணையை கூடுதல் நாட்களாக நடத்தி விரைவில் முடிக்க வேண்டும், தாமதம் தான் ஆதங்கம், சி.பி.ஐ நீதி அளிக்காது, சுட்டவர்களில் சிலர் சிறைச்சாலை சென்றிருக்க வேண்டும் என்றார்.