தமிழ்நாடு

திருச்சி: ஸ்பா என்ற பெயரில் ’விபச்சார விடுதி’ நடத்திவந்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கைது...!

Malaimurasu Seithigal TV

மசாஜ் சென்டரில் விபச்சாரம் விவகாரம்:  9 நாள் தலைமறைவாக இருந்த விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில் 10வது நாளில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

திருச்சி மாநகர் கருமண்டபம் சிங்கராயர்நகர் பகுதியில் ’சைன் ஸ்பா மசாஜ் சென்டர்’  அனுமதி இல்லாமல் நடைபெற்று வருவதாக கடந்த 6 மாதத்திற்கு முன்பே செந்திலை போலீசார் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மசாஜ் சென்டரை எடுக்காமல் நடத்தி  வந்ததை அடுத்து கடந்த 19 -ஆம் தேதி திடீரென கண்ட்ரோண்மெண்ட் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மசாஜ் சென்டரில் இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது தெரிய வந்ததையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு  போலீசார் அந்த இரண்டு பெண்களையும் மீட்டனர். மேலும் மேலாளராக இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லட்சுமி தேவியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்தனர்.

பின்னர், லட்சுமி தேவியின்  வாக்குமூலத்தில் இந்த மசாஜ் சென்டர் செந்திலுக்கு சொந்தமானது என்றும். வயலூர் பகுதியை சேர்ந்தவர் இவர் 'திருச்சி மத்திய மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவராக’  உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை தேடி வந்த நிலையில்,  கடந்த  9 நாட்களாக தலைமறைவாக இருந்த செந்தில் விபச்சாரத் தடுப்பு பிரிவு போலீசார் 10வது நாளான இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ’சைன் ஸ்பா’  உரிமையாளர் செந்திலை  ஜேஎம் 3 நீதிமன்ற நீதிபதி பாலாஜி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில்   போலீசார் பாதுகாப்புடன் அடைத்தனர்.

இதுவரை விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக இவரை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.