தமிழ்நாடு

குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு..! திருச்சி மக்கள் போராட்டம்...!

Malaimurasu Seithigal TV

திருச்சி அருகே குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலகல்கண்டார் கோட்டை தட்டான் குளத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அரசு பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேல கல்கண்டார் கோட்டை தட்டான் குளத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் குளத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என மனு அளித்துள்ளனர். ஆனால் தற்போது வரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் அரசு பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகரம் முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குழாய்கள்  மூலம் செல்லப்படும் கழிவுநீர்களை சுத்திகரிப்பதற்காக சுத்திகரிப்பு நிலையம் ஒவ்வொரு பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மேல கல்கண்டார்கோட்டை 45 வது வார்டு தட்டான் குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ராட்சத குழிகள் தோண்டப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமிநாதன் நகர், மாருதி நகர், அர்ஜுனன் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் 1500 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் 11.5 ஏக்கர் நீர் நிலை உள்ள குளத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பதாகவும் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வருவதால் ஆயி1,500 குடும்பங்களும் பாதிக்கப்படுவதாகவும் இது சம்பந்தமாக இரண்டு மாதமாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். 

திடீரென மேல கல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை வழிமறித்து அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மாநகராட்சி உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மீண்டும் பொது மக்களிடம் கையெழுத்து வாங்கி மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும் எனவும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.