தமிழ்நாடு

திண்டுக்கல் அருகே நிகழ்ந்த சோகம்....! தான் வளர்த்த 2 பிள்ளைகளுடன் மின்னல் தாக்கிபலியான பெண்...!

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு கொங்கர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (வயது 55). இவரது கணவர் துரை என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் யாரும் இல்லை. இந்த நிலையில் தேவி அதே பகுதியில் உள்ள ராமசாமி என்பவரின் இடத்தை குத்தகைக்கு எடுத்து ஷெட் அமைத்து 8 பசுமாடுகள் மற்றும் 5 கன்று குட்டிகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் தேவியின் வீட்டிற்கு வழக்கமாக பால் கறக்க வரும் காளிதாஸ் இன்று அதிகாலை வந்து பார்த்தபோது வீட்டில் தேவியும் 4 பசு மாடுகளும் இல்லை. அதனைத்தொடர்ந்து வீட்டில் இருந்த மற்ற பசுக்களின் பாலை கறந்து விட்டு சென்று விட்டார்.

பால் வினியோகம் செய்துவிட்டு மீண்டும் 9 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடன் சேர்ந்து தேவியையும் பசு மாடுகளையும் தேடி உள்ளார். அப்போது வீட்டில் இருந்து சற்று தள்ளி இருந்த காட்டில் இரண்டு பசு மாடுகள் கட்டப்பட்டிருந்த நிலையில், அருகே தேவியும் இரண்டு பசுக்களும் மின்னல் தாக்கிய நிலையில் இறந்து கிடந்தனர். 

இதுகுறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த மழை பெய்த போது, மாட்டை பிடித்து கொண்டு தேவி சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதால் தேவியும் இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார் தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி இரண்டு பசு மாடுகள் உயிரிழந்ததால் அதன் கன்றுகள் இரண்டும் பாலுக்காக கத்தியது காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.