தமிழ்நாடு

மயிலாடுதுறையில் ஆளுநர் தாக்கப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய்... தமிழ்நாடு காவல்துறை விளக்கம்!

Malaimurasu Seithigal TV

மயிலாடுதுறையில் ஆளுநர் தாக்கப்பட்டார் என்று ஆளுநர் மாளிகை கூறுவது முற்றிலும் பொய் என தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

கடந்தாண்டு ஏப்ரல் 19-ம் தேதி, ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் ஆதீனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற போது, இடதுசாரி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தடி மற்றும் கற்களை கொண்டு தாக்கியதாக ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றம்சாட்டியது. 

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த கூடுதல் டிஜிபி அருண், சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றினை வெளியிட்டார். மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் கடந்து சென்ற பின்னரே, போராட்டக்காரர்கள் கருப்புக்கொடிகளை சாலையில் வீசியதாக கூறினார். அதில் ஒரே ஒரு கொடி மட்டுமே ஆளுநரின் கான்வாய்-க்கு பின்னால் வந்த தனியார் வாகனம் ஒன்றின் மீது விழுந்ததாக வீடியோ ஆதாரங்களை அவர் வெளியிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் இந்த வழக்கு புலன் விசாரணையில் உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். 

மேற்படி சம்பவங்கள் அனைத்துக்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளதாக கூறிய அவர், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் குறிப்பிட்டார்.