தமிழ்நாடு

தை அமாவாசை...கோயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்...புனித நீராடி வழிபாடு!

Tamil Selvi Selvakumar

தை அமாவாசையான இன்று தமிழகம் முழுவதும் உள்ள புனித தலங்களில் பக்தர்கள் நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர். 

தை அமாவாசை :

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் தொடங்கி தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் புன்னக்காயில் வரை உள்ள 64 தீர்த்தக்கட்டங்களிலும் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர். மேலும், புனித நீராடி சுவாமி தரிசனமும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேப்போன்று, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள திருராமேஸ்வரத்திலும் ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனையடுத்து  இத்தலத்தில் அருள் பாலித்து வரும் சிவபெருமான் மற்றும் மங்களாம்பிகை அம்மனை மக்கள் தரிசனம் செய்தனர்.

இதேப்போல், தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள காவிரி ஆறு புஷ்பமண்டப படித்துறையில், ஏராளமானவர்கள் புனித நீராடி, எள், அரிசி, காய்கறிகள், அகத்திகீரை ஆகியவற்றை தானமாக கொடுத்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

இதனைதொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும், உற்சவ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்,.