I.N.D.I.A. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் பிரதமா் மோடியின் முயற்சி பலிக்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன் தொிவித்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்.தொல் திருமாவளவன் நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் துவக்கம், ஒட்டு மொத்த இந்திய தேசத்திற்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. பள்ளிகளில் காலை உணவு திட்டம் எப்படி வரவேற்பை பெற்றுத் தந்ததோ, அதேபோன்று இதுவும் முதல்வரின் செல்வாக்கை நிச்சயமாக உயர்த்தும்"
எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலளித்து சதியில் ஈடுபடுகிறார். இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி பாஜகவை அப்புறப்படுத்தும். அதையும் மீறி பாஜக ஆட்சிக்கு வந்தால் இப்போது அவர்கள் அறிவித்துள்ள பாரத் என்ற பெயரும் மாற்றப்பட்டு இந்துராஷ்டிரம் என்ற பெயர் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்பேசிய அவர், தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் பாஜக காலூன்ற முடியாது என்றும் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார் என்பது செய்தியாளர்களின் கேள்விக்கு பின்னர்தான் தனக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க || "திமுகவுக்கு சனாதனமும் இந்து தர்மமும் வேண்டாம், அமாவாசை மட்டும் வேண்டுமா?" அண்ணாமலை கேள்வி!!