தமிழ்நாடு

ஒரே எண்ணை கொண்ட 2 வாகனங்கள்...பல ஆயிரம் லிட்டர் பால் திருட்டு...அதிகாரிகள் சொல்வது என்ன?

Tamil Selvi Selvakumar

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் நூதன முறையில் பல ஆயிரம் லிட்டர் ஆவின் பால் திருடப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து செயல்படும் ஆவின் பால் பண்ணையில் இருந்து திமிரி வழித்தடத்தில் இயக்கப்படும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளைக் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்கள் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 அயிரத்து 500 லிட்டர் என பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து ஆவின் நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரே பதிவெண் கொண்டு இரண்டு வாகனம் இயக்கப்பட்டது குறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து ஒரே பதிவு எண்ணில் இயங்கி வந்த இரண்டு வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆவின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.