தமிழ்நாடு

திரளான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்...!

Tamil Selvi Selvakumar

சித்திரைத் திருவிழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். 

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா, கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில், நாள்தோறும் தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சுவாமிக்கு பால், தயிர், நெய், சந்தனம், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வந்தன.

அதன்படி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 

தேரோட்ட திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர்.