தமிழ்நாடு

தென் மேற்கு பருவ மழையின் காரணமாக பல்வேறு அணைகளின் நீர் மட்டம் உயர்வு.. வெள்ள அபாய எச்சரிக்கை!!

Suaif Arsath

தென் மேற்கு பருவ மழையின் காரணமாக மேட்டூர் அணை சேர்வலாறு அணை மற்றும் கொடிவேறி அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கதான நீர் வரத்து  ஒரு லட்சத்து 41 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் மின் நிலையங்கள் வழியே 23 ஆயிரம் கன அடி நீரூம்  16 கண் மதகுகள் வழியே ஒரு லட்சத்து 17 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு

இதனிடையே,மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதன் படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம்  73 புள்ளி 05 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு மூவாயிரத்து முன்னூற்று 98 கன அடி நீர் வரும் நிலையில் ஆயிரத்து ஆறு கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு

இதேபோல, 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 100 புள்ளி 56 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம்  இரண்டு நாட்களில் 21 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொடிவேரி அணை

இதேபோல்  கோபிச்செட்டிப்பாளையம் கொடிவேரி அணைக்கு, சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  பவானி சாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் , அணைக்கு வரும் நீரானது முழுமையாக வெளியேற்றப்படுவதால் பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் நாள் சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.