தமிழ்நாடு

வெட்டிக்கொல்லப்பட்ட வி.ஏ.ஓ. குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ.1 கோடி நிவாரணத்தை கனிமொழி எம்.பி. வழங்கினார்...!

நேர்மையான அதிகாரியை இழந்து இருக்கின்றோம்.  குடும்பம் வாடி கொண்டு இருக்கிறது.

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக (வி.ஏ.ஓ) பணியாற்றியவர் லூர்துபிரான்சிஸ் (55). இவர் வி.ஏ.ஓ அலுவலகத்துக்குள் பணியில் இருந்தபோது, இரண்டு மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டினர். இந்நிலையில், படுகாயமுற்ற லூர்து பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மணல் கடத்தல் பற்றி காவல்துறையினரிடம் (வி.ஏ.ஓ) புகார் அளித்த நிலையில், அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்ட ராமசுப்பு மற்றும் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். பின்னர், வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ்  குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என்றும், கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும்,  முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறி ரூ.1 கோடி ரூபாய்க்கான காசோலையை குடும்பத்தாரிடம் வழங்கினார்.. இதில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் செந்தில் ராஜ், ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்பி கூறுகையில், நேர்மையான அதிகாரியை இழந்து இருக்கின்றோம்.  குடும்பம் வாடி கொண்டு இருக்கிறது. இவரது குடும்பத்திற்கு முதல்வர் 1 கோடி அறிவித்து இருந்தார். அந்த காசோலையை தற்போது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை டிஎஸ்பி சுரேஷ் தலைமையில், விசாரணை செய்யப்பட உள்ளது. மேலும், அந்த 2 பேர் மீதும் குண்டாஸ் போட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், மேலும், அந்த பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்..