தமிழ்நாடு

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்... முருகையன் உறுதி

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் வெளியே தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையில் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியும் தற்போது வரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் நான்கு ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியலை உடன் வெளியீட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் எனவும் அதேபோல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தில் பணி இறக்கத்தினை தவிர்க்க பதவி உயர்வு பாதுகாப்பு அரசாணையை உடன் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர் இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் விதித்திருத்த அரசாணையினை உடன் வழங்கிட வேண்டும் எனவும் கூறிய அவர் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றும் அதுவரை நாங்கள் இங்கே தான் இருப்போம் என்றும் தெரிவித்தார்.