தென்காசி: தென்காசி பகுதியில், விவசாய நிலங்களை அளித்து, பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்றவரை எதிர்த்து ஊர் மக்கள் போராட்டம் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா பண்பொழி பகுதிக்கு அருகே உள்ள கந்தசாமிபுரம் என்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு வாழ்வாதாரமாக விவசாயத் தொழில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த ஊர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அழித்து புளியங்குடி பகுதியை சேர்ந்த பிலால் என்பவர் பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த ஊர் மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத சூழலில், ஆவேசம் அடைந்த அந்த பகுதி மக்கள் ஒன்று கூடி விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் எங்கள் வயிற்றில் அடிக்க முயற்சி செய்கிறீர்களே, விவசாய நிலங்கள் நிறைந்த இந்த பகுதியில் பிளாட் அமைத்து வீடு கட்டுவதால் விவசாயம் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் எங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதாகவும், அது மட்டுமல்லாமல் மீதமுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூட நிலத்தடி நீர் இல்லாத சூழல் நிலவ வாய்ப்புள்ளதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த அச்சன்புதூர் காவல் நிலைய காவலர்கள், அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள விவசாய நிலத்தை அழித்து பல்வேறு அரிய வகை மரங்களை வெட்டி சட்ட விரோதமாக அங்கிருந்து மரங்களை அவர்கள் எடுத்து சென்றிருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து, அச்சன்புதூர் காவலர்கள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: பழங்குடியின மாணவி நீட் தேர்ச்சி: ஊர் மக்கள் கொண்டாட்டம்!