கடலூா் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் எல்லைகளை வரையறுக்கும் விதமாக என்எல்சி நிறுவனம் எச்சாிக்கை பலகைகளை வைத்து வருகிறது.
வளையமாதேவி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்எல்சி நிறுவனம் விளைந்த நெற்பயிர்களை அழித்துவிட்டு புதிய பரவானாறு வாய்க்காலை வெட்டியது. இதன் காரணமாக அப்பகுதியில் பல ஏக்கர் அளவில் பயிாிடப்பட்டு அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அழிக்கப்பட்டன.
இதனையடுத்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நீதிமன்றத்தை நாடி அழிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு நிவாரணம் பெற்றனர். இந்நிலையில் நீதிமன்றம் என்எல்சி நிர்வாகம் சுரங்க விரிவாக்க பணிக்கு கைப்பற்றப்பட்ட இடங்களில் விவசாயிகள் பயிர் செய்வதை தடுப்பதற்கு வேலிகளை அமைத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தியது.
அதன்படி என்எல்சி நிர்வாகம் வளையமாதேவி பகுதியில் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட இடங்களில் எல்லைகளை வரையறுக்கும் விதமாக எச்சரிக்கை பலகைகளை அமைத்து வருகிறது.
ஏற்கனவே கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடுகள் இன்னமும் வந்து சேரவில்லை என்பதாலும், என்எல்சி வேலைவாய்ப்பு என்பது உறுதிப்படுத்தப்படாமல் இருப்பதாலும் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனா். மேலும், என்எல்சி நிர்வாகத்தின் தற்போதையை செயல்பாடு விவசாயிகளை அழிக்கும் செயல் எனவும் வேதனை தொிவித்துள்ளனா்.