அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் பலர் எதிர்க்கிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசையும், தமிழ்நாடு ஆளுநரையும் கண்டித்து, திமுக சார்பில் இன்று மதுரையை தவிர மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி அண்மையில் நீட் தோ்வு குறித்து மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வைத்து ஆலோசனை நடத்தினாா். அப்போது பேசிய அவா் இனி எக்காரணத்தை கொண்டும் நீட் தோ்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து இடமாட்டேன் என தொிவித்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு அடுத்த நாளே குரோம்பேட்டையில் நீட் தோ்வில் தோல்வியடைந்த மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். இதில் துக்கம் தாழாமல் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் நீட் தோ்வு விலக்கு குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி மாநிலம் முழுவதும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் திமுகவினா் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். பிறகு நீட் தேர்வின் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், நீட் தேர்வை ரத்து செய்ய அரசியல்வாதிகள் மட்டுமல்ல கல்வியாளர்களும் ஆதரவு அளித்துள்ளதாகவும், ஆனால் மோடி அரசு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்போராட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனிடையே, இன்று காலை திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி, போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து, உதயநிதியிடம் வாழ்த்து பெற்று, நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டனர்.