தமிழ்நாடு

சுங்கச்சாவடி.... பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்த நீதிபதிகள்!!

Malaimurasu Seithigal TV

சுங்கச்சாவடி அமைக்க கையகப்படுத்திய நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டை 10 மடங்கு அதிகரித்து காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை தொடர தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தற்போதைய ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகாவில் உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில், சுங்கச்சாவடி அமைக்க, 2018ம் ஆண்டு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.  ஆறு ஆண்டுகள் கடந்தும் நிலத்தை பயன்படுத்தாமல் உள்ளதால், நிலத்தை பயன்படுத்த தங்களுக்கு அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு சட்டப்படி  இழப்பீடு வழங்கக் கோரி நில உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், குறிப்பிட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டை மோசடியாக பத்து மடங்கு அதிகரித்து காட்டியதால் சுங்கச்சாவடி அமைக்க 500 கோடி ரூபாய் செலவாகும் என்பதால், நிலத்தை உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க உள்ளதாகவும், அதனால் நிலம் கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய ஆட்சேபம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு, நிலம் கையகப்படுத்த 2018ம் ஆண்டு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்த நீதிபதிகள், நிலத்தை உரிமையாளர்களிடம் இரண்டு வாரங்களில் ஒப்படைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.  அதேபோல, வழிகாட்டி மதிப்பீட்டை பத்து மடங்கு அதிகரித்து காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.