மாநில அரசு தயாரித்த அறிக்கையை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டம்:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கல்வராயன் மலையில் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை காப்புகாடாக மாற்றுவதை வனத்துறை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.
இதையும் படிக்க: ஆளுநர் கருத்துகளை நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறதா? கேள்வி எழுப்பிய அண்ணாமலை!
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை:
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன், ஆளுநர் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், மாநில அரசு தயாரித்த அறிக்கையை ஆளுநருக்கு மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், அதை மீறி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இருந்ததை நீக்கிவிட்டு தனது சொந்த கருத்துக்களை பதிவிட்டுள்ளது, அரசியல் சாசன வரம்புக்கு மீறிய செயல், இதனை வன்மையாக கண்டிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
வானதி சீனிவாசனுக்கு பதில்:
தொடர்ந்து பேசிய அவர், ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட உரையானது திடீரென்று வழங்கப்பட்ட உரை என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்த கருத்து தவறானது என்று சுட்டிக்காட்டிய அவர், ஆளுநர் ஓப்புதல் பெறாமல் அறிக்கை தயார் செய்திருக்க முடியாது. அப்படி என்றால் ஆளுநர் அதை தெரிவித்து இருக்க வேண்டும் என வானதிக்கு பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.