தமிழ்நாடு

7 வருடம் சிறுக சிறுக சேமித்த பணம்...11 வயது சிறுமி கூறிய நெகிழ்ச்சிகரமான சம்பவம்...!

Tamil Selvi Selvakumar

உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்ப நலனுக்காக உண்டியலில் பணம் சேர்த்த சிறுமி அதனை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன்னாள் முப்படை வீரர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில், மாநில மாநாடு நடைபெற்றது. அதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அத்துடன், நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். 

அப்போது மேடை ஏறிய மதுரையைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் 11 வயது மகள் தனுஷ்கா, ஏழு வருடங்களாக சிறு சிறுக உண்டியலில் சேமித்த 7 ஆயிரத்து 999 ரூபாயை, உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்ப நலனுக்காக ஆட்சியரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கூறினார். 

இது குறித்து சிறுமி பேசிய போது, தான் எல்கேஜி படிக்கும் போது ராணுவ வீரரின் உடை அணிந்து பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது ராணுவ வீரர்கள் குறித்து தனக்குத் தெரியாததால் தனது தாய் தந்தையரிடம் கேட்டேன். ”எதிரிகளிடம் இருந்து நம் நாட்டை பாதுகாப்பதற்காக இரவு பகல் பார்க்காமல் நாட்டிற்காக  உழைப்பவர்கள் ராணுவ வீரர்கள் என்றும், நாட்டுக்காக தங்களது உயிரை கூட தியாகம் செய்பவர்கள் என்றும், நம்  போற்றுதலுக்கு உரியவர்கள் என்றும் தனது பெற்றோர் தெரிவித்ததால், அன்று முதல் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பாவிடம் உண்டியல் வாங்கி வரச் சொல்லி அதில் தனக்கு பிறந்தநாள் மற்றும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு தரும் பணத்தை கடந்த ஏழு வருடங்களாக சிறுக சிறுக சேமித்து வந்ததாகவும்” கூறினார். அப்படி சிறுக சிறுக சேமித்து தற்போது தன்னிடம் உள்ள 7999 ரூபாயை நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தின் நலனுக்காக  மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நாளை கொடுக்கப் போவதாகவும் சிறுமி தெரிவித்தார். சிறுமியின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.