தமிழ்நாடு

நாளை 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்...பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

Tamil Selvi Selvakumar

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நாளை தொடங்குகிறது. 

சட்டசபை கூட்டம்:

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபைக்கு முதல் முறையாக உரை நிகழ்த்த வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நாளை பேண்டு வாத்தியத்துடன் கூடிய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது. 

ஆளுநர் உரை:

அதன்படி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிப்பார். மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள், புதிய திட்டங்கள் பற்றி உரை நிகழ்த்துவார். 

அதைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசிப்பார். காகிதம் இல்லாத சட்டசபை என்பதால், அவர்களின் உரைகள், சட்டசபையில் உள்ள தொடுதிரை கணினிகளில் திரையிடப்படும். பின்னர் ஆளுநர் உரை முடிந்ததும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரபுபடி வழியனுப்பி வைப்பார்கள். 

முதலில் இரங்கல் குறிப்பு:

பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். இதையடுத்து, சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். 

எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டம்:

சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சட்டசபையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதனிடையே, நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்விகள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.