தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தல்: முதலமைச்சர் யாரை கை காட்டுகிறாரோ...அவரே அடுத்த பிரதமர் - உதயநிதிஸ்டாலின்!

Tamil Selvi Selvakumar

சனாதனத்தை ஒழிக்க வந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 2  ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ஈடில்லா இரண்டாம் ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராயப்பேட்டை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 

அப்போது பேசிய அவர், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வதாரம், பாதிப்படைந்த மக்களுக்கு 4,000 நிதியுதவி, புதுமை பெண் திட்டம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 மணி நேரம் போன்ற மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்ததாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சனாதனத்தை ஆளுநர் கொண்டுவர பார்க்கிறார் என்றும்,  ஆனால் அந்த சனாதனத்தை ஒழிப்பது தான் திராவிடம் மாடலின் ஆட்சி எனவும் தொிவித்தாா். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் பெறும் வெற்றியின் மூலம் யாரை முதலமைச்சர் கையை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் எனவும் குறிப்பிட்டாா்.