கர்நாடக அரசிடம் இருந்து உரிய நீரை பெற்றுத்தர தி.மு.க அரசுக்கு திராணி இல்லை என முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான காமராஜ், சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைப்பு செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்:-
”டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி விட்டன. 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்களில் 3.5 லட்சம் ஏக்கரில் தண்ணீர் இன்றி கருகி விட்டன. அடுத்து சம்பா சாகுபடி தொடங்குவதே கேள்விக்குறியாக உள்ளது.
காவிரி நீர் பிரச்சனை வரும் நேரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்படும் முடிவுகள் செயல்படுத்தப்படும். ஆனால் தி.மு.க. அரசோ அது போல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தவில்லை. கர்நாடகாவில் இருந்து உரிய நீரை பெற்று கொடுக்க தி.மு.க அரசுக்கு திராணி இல்லை.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது எடப்பாடி பழனிச்சாமி. அதோடு இல்லாமல் விவசாயிகளின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தார். மேலும் வெள்ளம், புயல், வறட்சி காலத்தில் ரூ.2268 கோடி நிவாரணம் வழங்கினார்.
பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக ரூ.9600 கோடி வழங்கினார். இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டமாகும். இதுபோல் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் மு.க.ஸ்டாலினோ எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.” இவ்வாறு அவர்கள் கூறினர்.