ராகுல்காந்தியின் எம்பி பதவி, நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டையணிந்தும் பதாகைகளுடனும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டையணிந்து ஒரே பேருந்தில் பயணம் செய்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்தடைந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ராகுல்காந்தி 24 மணி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை எனவும், ஹிட்லர், முசோலினி ஆட்சியிலும் நடக்காத கொடுமைகள் தற்போது அரங்கேறுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கான வினாக்கள் விடைகள் நேரம் தொடங்கியது. அப்போது எம்எல்ஏ ராஜேஷ்குமார் கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கன்னியாகுமரி மாவட்டம் கிளியூரில் சார்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பான கருத்து, அரசு பரிசீலனையில் இல்லை எனக்கூறினார்.
இதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சேலம் தலைவாசல், கால்நடை பல்கலைக்கழகத்திற்கான பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும் என தெரிவித்தார். திருவண்ணாமலையில் புதிய கால்நடை அல்லது தனியார் கல்லூரி தொடங்க அரசின் கொள்கை முடிவுகளின் அடிப்படையில், நிதிநிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.