தமிழ்நாடு

"பாடப்புத்தகத்தில் சனாதனம் குறித்த கருத்து நீக்கப்படும்" - அன்பில் மகேஷ்

Tamil Selvi Selvakumar

அரசு பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ள  சனாதனம் குறித்த கருத்தை நீக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளாா். 

சென்னை தியாகராயநகாில் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், மழைக்காலம் தொடங்க உள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளதாக தொிவித்தாா்.

மேலும் சனாதானம் குறித்து அரசு பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்தை நீக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தாா். கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பாடத்திட்டம் வடிவமைப்பு குழு  பரிந்துரைப்படி பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு 5ஆண்டு நிறைவடைய உள்ளது. எனவே, அடுத்த ஆண்டு பாடத்திட்டத்தை அறிவியல் ரீதியாகவும் , ஆக்கபூர்வமாகவும் அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பேசிய அவர், புதுக்கோட்டையில் ஆசிரியர் முடிவெட்ட சொன்னதால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் வருத்தத்திற்குரியது எனவும், கொரோனா காலகட்டத்திற்கு பின் மக்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளது எனவும், அது மாணவர்களாகிய குழந்தைகள் மத்தியிலும் அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

மாணவர்களின் தற்கொலை முடிவிற்கு குடும்பம் மற்றும் மாணவர்களின் சூழலையும் ஆராய வேண்டிய தேவை உள்ளது. கல்வியைத் தாண்டி வேறொரு உலகம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கவே பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும், வெளிநாடு சுற்றுலாவும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.