வழக்கமாக எதிர்க்கட்சியினரை ஓடவிடும் முதலமைச்சர், ஆளுநரை ஓடவைத்துள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
உரையை வாசித்த ஆளுநர்:
நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த “திராவிட மாடல்”, அமைதி பூங்கா தமிழ்நாடு போன்ற வார்த்தைகளை குறிப்பிடாமல் சில பத்திகளை விட்டுவிட்டு உரையை ஆளுநர் வாசித்தார்.
தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர்:
இதையடுத்து, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும், உரையில் ஆளுநர் சேர்த்து படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து, ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.
இதையும் படிக்க: எழுவர் விடுதலை முதல் ஆன்லைன் ரம்மி வரை...ஆளுநரின் செயல்பாடு என்ன? திரும்பப் பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!
பேரவையை விட்டு வெளியேறிய ஆளுநர்:
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதையடுத்து ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பரிசுகள் வழங்கிய உதயநிதி:
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை சைதாப்பேட்டையில், இளைஞர் திருவிழா என்ற பெயரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சைதாப்பேட்டையில் இருந்து தான் தனது அரசியல் பயணத்தை தொடங்கியதாக கூறினார்.
ஆளுநரையே ஓட விட்ட முதலமைச்சர்:
தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவை நிகழ்வின் போது ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறித்து விமர்சித்தார். வழக்கமாக தனது தீர்மானங்களின் மூலம் எதிர்க்கட்சிகளை தான் முதலமைச்சர் ஓட விடுவார். ஆனால், தற்போது சட்டப்பேரவையில் இருந்து ஆளுநரையே ஓட வைத்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.