தமிழ்நாடு

மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றி...சிறப்பு விருந்தினராக அழைத்து கெளரவித்தார் முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

முதலமைச்சர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவதை நேரில் காண கடிதம் எழுதிய மாணவனை சிறப்பு விருந்தினராக அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் கிராமத்தை சேர்ந்த எட்டு வயது மாணவர் லிதர்சன் என்பவர், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றுவதை நேரில் பார்க்க வேண்டுமென்று முதலமைச்சருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர், சுதந்திர தின விழாவிற்கு மாணவர் லிதர்சனுக்கும், அவரது தாயாருக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்தார். அதன்படி, விழாவிற்கு வருகை தந்த இருவரும் விருந்தினர் பகுதியில் அமரவைக்கப்பட்டனர். அப்போது, முதலமைச்சர் அணிவகுப்பை பார்வையிட்டு செல்லும் போது முதலமைச்சரை நேரில் பார்த்ததில் மாணவர் லிதர்சன் உற்சாகமாக காணப்பட்டார். அதோடு கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் கொடியேற்றுவதை பார்த்ததும் மாணவர் மகிழ்ச்சியில் திளைத்தார்.

மேலும் கொடியேற்றுவதை நேரில் காண்பதற்காக கடிதம் எழுதிய மாணவனை சிறப்பு விருந்தினராக அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.