தமிழ்நாடு

''காவிரி டெல்டாவை தண்ணீரின்றி முதலமைச்சரே அழித்து விட்டார்'' - பி.ஆர்.பாண்டியன்.

Malaimurasu Seithigal TV

2 மாதங்களாக கடிதம் கொடுக்கும் வேலையை காரணம் காட்டி, காவிரி டெல்டாவை தண்ணீர் இன்றி முதலமைச்சரே அழித்துவிட்டாத விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா முற்றிலுமாக அழிந்து போய்விட்டது. குருவையை தொடர முடியவில்லை. மூன்றரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் கருகிவிட்டது . சம்பா பணியையும் தூங்குவதற்கு தண்ணீர் இன்றி காவிரி டெல்டா வறண்டு கிடக்கிறது. சென்னை உட்பட 32 மாவட்டங்களில்  மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படப்போகிறது.  அரிசிக்கு அண்டை மாநிலங்களிலிலும் , வெளிநாடுகளிலும் கையேந்த வேண்டிய நிலை தமிழ்நாட்டின் ஏற்பட போகிறது .

 இதைப் பற்றி தமிழக முதலமைச்சர் துளியும் கவலைப்படவில்லை. அதற்கான எந்த வித அவசர ஆலோசனை கூட்டங்களை துறை சார்ந்த அமைச்சர்களை கொண்டோ ,  மாவட்ட  ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்களை கொண்டோ நடத்துவதற்கு இதுவரை முதலமைச்சர் முன்வரவில்லை.

குறிப்பாக தமிழ்நாட்டில் உயர் பதவிகளில் இருக்கின்ற முக்கியமான துறைகளில் வடநாட்டுக்காரர்களே அதிகாரிகளாக நியமிக்க பட்டதால் உணர்வு பூர்வமாக அனுபவபூர்வமாக அறிந்து அன்றாடம் செயல்படுவதற்கு வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது.  தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனையில் பெற்ற உரிமையை தமிழ்நாடு அரசு பறிகொடுக்கப் போகின்றதோ என்ற அஞ்சுகிறோம்.

முதலமைச்சர் மற்றும் தமிழக அரசின்  நேரடி பிரதிநிதியாக நீர் பாசன துறை செயலாளர்  இருக்கின்றார். அவர் அளிக்கும் கடிதத்தின் அடிப்படையில் அவசர கால கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. காவிரி டெல்டா அழியப்போகிறது. உடனடியாக கூட்டத்தைக் கூட்டி கர்நாடகாவில் அணைகள் நிரம்ப தண்ணீர் இருந்தும் தர மறுக்கின்ற கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும்.

தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இர்ண்டு  மாத காலமாக பிரதமருக்கும் நீர் பாசன துறை அமைச்சருக்கும் கடிதம் கொடுக்கும் வேலையை காரணம் காட்டி காவிரி டெல்டாவையும் தமிழக முதலமைச்சரே அழித்துவிட்டார்.  இந்த அழிவிற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். இன்றைய நிலையில் அவசரமாக ஆணையத்தின் மீது வழக்கு தொடர வேண்டும். ஆனால், வழக்கை தொடுக்க வேண்டிய தமிழக அரசு அதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஆணையத்திற்கு இதுவரையில் எந்த ஒரு கடிதத்தையும் அளிக்க முன்வரவில்லை.

ஆணையத்தை கூட்டவோ ஆணையத்தில் அவசர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தவோ சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சார்ந்த நீர்ப்பாசன துறை செயலாளர்களாக இடம்பெற்றிருக்கின்ற பிரதிநிதிகளுக்கு மட்டுமே அதற்கான அனுமதி இருக்கிறது. இதை கூட மறந்துவிட்டு நீர்ப்பாசன துறை அமைச்சர் :- ”காவிரி மேலாண்மை ஆணையம் பிரதமர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் எனவேதான் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்”,  என்று சொல்கிறார். இது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு புறம்பானது. 

50 ஆண்டு காலம் போராடி பெற்ற உரிமையை பறி கொடுப்பது மட்டுமல்ல 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி காவிரி பிரச்சனையை இழுத்து செல்கின்ற வகையில் ஒரு மூத்த அமைச்சர் துரைமுருகன் சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

ஒட்டுமொத்த பேரழிவிற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் . இந்த நிலைமைகளுக்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது பல்வேறு துறைகளில் செயல்பாடுகள் முடங்கி இருக்கிறது. வேளாண்மை துறை மிகப் பெரிய உற்பத்தி இழப்பை சந்திக்கப் போகிறது. அடிப்படை காரணம் முதலமைச்சருக்கும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கும் நேரில் சந்திப்பதற்கு கூட முதலமைச்சர் வாய்ப்பளிக்க மறுக்கின்றார்.

பிரச்சினைகள் குறித்து அன்றாடம் அமைச்சர்களிடம் கலந்து பேச மறுக்கிறார். எனவே, இந்த மிகப்பெரிய பின்னடைவிற்க்கும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . இதனை உணர்ந்து முதலமைச்சர் தன் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் காவிரி நீரை பெற்று தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்கும் பெற்ற உரிமையை பாதுகாப்பதற்கும் முன்வர வேண்டும்.

இல்லையேல், தமிழ்நாடு அரசிற்கும் தமிழ்நாடு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள் இருக்கிறோம். விரைவில் வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கிறேன்” .

இவ்வாறு தெரிவித்தார்.