நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள பெரம்பலூர் மக்களவை எம்.பி பாரிவேந்தர் மற்றும் மயிலாடுதுறை மக்களவை எம்.பி ராமலிங்கம் ஆகியோர், தமிழகம் பிரிக்கப்படுமா என்பது குறித்து எழுத்து பூர்வ கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களையும் இரண்டாக பிரிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு உள்ளதா? அதற்கான காரணம் என்ன? மாநிலங்களை பிரிக்க தனிநபர் அல்லது அமைப்புகளிடம் இருந்து கோரிக்கை வந்ததா என்ற விவரங்களை எம்.பிக்கள் கேட்டிருந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், தமிழகம் உள்ளிட்ட எந்த ஒரு மாநிலத்தையும் இரண்டாக பிரிக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளார். ஆனால் புதிய மாநிலங்களை உருவாக்க தனிநபர், அமைப்புகளிடம் இருந்து கோரிக்கை வருவதாக கூறிய அவர், மாநிலங்களை பிரிப்பதற்கான விதிமுறைகள் , காரணிகளை கருத்தில் கொண்டே மாநிலங்களை பிரிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு, கொங்கு நாடு உருவாக உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, இணை அமைச்சராக அறிவிக்கப்பட்ட எல்.முருகனின் மாநிலம் ‘கொங்கு நாடு’ என குறிப்பிட்டிருந்ததே காரணம் என சொல்லப்படுகிறது.