ஆளுநர் மீதான தீர்மானம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஆளுநரின் போக்கை கண்டித்து ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். மேலும், ஆளுநர்களின் செயல்பாடு குறித்து பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதில், தமிழ்நாட்டை போலவே டெல்லி துணை ஆளுநருக்கு எதிராக நாங்களும் விரைவில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் எழுதிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தந்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டப்பேரவையின் இறையாண்மையே உச்சமானது எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பொறுப்புகளை நியமன ஆளுநர் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதில் தீ பரவட்டும் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு முதலமைச்சர் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.