தமிழ்நாடு

2024 நாடாளுமன்றத் தேர்தல்...ஜூலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சோதனை!

Tamil Selvi Selvakumar

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த 2021ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதன்பிறகு, அண்டை மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களில் பேரவைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்தலுக்கு நம்முடைய மாநிலத்தின் சில மாவட்டங்களில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போன்றவை அனுப்பப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இப்போது மக்களவைத் தேர்தலுக்கு நமது மாநிலமும் தயாராக வேண்டிருக்கிறது. 

இதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவைக்கும் அதிகமாக 35 சதவீதம் அளவுக்கு இயந்திரங்கள் அளிக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ தெரிவித்துள்ளார். உதாரணத்துக்கு, ஒரு மாவட்டத்துக்கு 200 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் பட்சத்தில், 270 இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.

அந்தவகையில், மாவட்டங்களுக்குத் தேவைப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியன மதிப்பீடு செய்யப்பட்டு தேர்தல் துறைக்குச் சொந்தமான கிடங்குகளில் வைக்கப்படும் என்றும் முதல் நிலை சோதனை நடத்தப்பட்டு, மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் தன்மை குறித்து சோதனை நடத்திக் காண்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.