தமிழ்நாடு

தென்காசி தொகுதியின் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்..! - சென்னை உயர்நீதி மன்றம்.

Malaimurasu Seithigal TV

தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவினை அறிவிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பழனி நாடார் என்பவர் அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பண்டியனை விட 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். 

இன்னிலையில், இந்த வெற்றியை எதிர்த்து செல்வமோகன் தாஸ் பழனி நாடார் மீது தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அந்த மனுவில், பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும், எனவே, குறிப்பாக தபால் வாக்குகளையும், மின்ணனு இயந்திரங்கள் மூலம் பதிவான வாக்குகளையும் 28 முதல் 30  சுற்றுகளுக்கான வாக்குகளை மறு எண்ணிக்கைக்கு உட்படுத்த உத்தரவிடுமாறும் கோறியிருந்தார்.

இந்த மனு மீதான வழக்கு   நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதன்பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் குளறுபடி நடந்திருப்பது ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளது எனக்கூறி, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். அதோடு, 10 நாட்களில் அதற்கான முடிவினை அறிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், வழக்கு செலவுகளுக்காக 10,000 ரூபாயை வழக்கு தொடர்ந்த செல்வமோகன் தாஸுக்கு  வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.