சூடானிலிருந்து இதுவரை 257 தமிழர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டியளித்துள்ளார்.
சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் காவிரி திட்டத்தின் மூலம் மீட்கும் பணிகளை மத்திய,மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை அயலக தமிழர் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று 3 குழந்தைகள் உட்பட 10 தமிழர்கள் சூடானில் இருந்து டெல்லி வந்து அதன் பிறகு டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் அழைத்துவரப்பட்டனர்.
அவர்களை விமான நிலையத்தில் வெளிநாடு வாழ் தமிழர் நலவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் வரவேற்று ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை சொந்த ஊருக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் சிக்கி உள்ள தமிழர்களை கண்காணித்து தொடர்ந்து அவர்களை தாயகம் அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை சூடான் நாட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 257 பேரை மத்திய, மாநில அரசு உதவியுடன் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். அதன் அடிப்படையில் மதுரை கோயம்புத்தூர் சென்னை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நண்பர்கள் அழைத்து வரப்பட்டு அவர்களுடன் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் சூடானில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழகம் அழைத்து வரப்படுவர் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.