தமிழ்நாடு

ஜெயலலிதா அவமதிப்பு: "பதவிக்காக சாட்சியத்தையே மாற்றுகிறார் திருநாவுக்கரசர்" தமிழிசை வருத்தம்!!

Malaimurasu Seithigal TV

ஜெயலலிதா அவமதிப்பு விவகாரத்தில் முதல்வர் உண்மையை மறுக்கின்றார் என்றும் இதனை மறைப்பதில் எந்த பலனும் இல்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை வாழ் குமரி மாவட்ட இந்துக்களின் குடும்ப சங்கமம் ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் பல்வேறு பகுதியில் வசிக்கக்கூடிய குமரி மக்கள் ஒன்று கூடி விழா நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பல்துறையில் முன்னணி வகிக்கும் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பேசியுள்ளார். 

அப்பொழுது பேசிய அவர் " தமிழகத்தில் சரித்திரங்கள் மறைக்கப்படுகின்றது என்பது வருத்தம் அளிக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பெண் என்றும் பாராமல் கனமான பொருட்களால் தாக்கப்பட்டதோடு ஆடைகளை கிழித்து அவமதிப்பு செய்யப்பட்டது வரலாறு. ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அது கூட ஏற்றுக் கொள்ளலாம், ஜெயலலிதா உடன் சம்பவத்தின் போது இருந்த திருநாவுக்கரசர் பதவிக்காக பல கட்சிக்கு போகலாம். ஆனால் பதவிக்காக சாட்சியத்தையே மாற்றுகிறார் என்பது கவலையாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், சரித்திரம் நடந்தது, நடந்தது தான் எனவும் இதனை மறைப்பதில் எந்த பலனும் இல்லை எனவும் இனிமேல் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், இளைஞர்கள் எப்படி இதையெல்லாம் நம்புவார்கள் என ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.