தமிழ்நாடு

"சுற்றுலாத் துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது!"- சுற்றுலாத்துறை அமைச்சர்

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இந்திய அளவில் தமிழ்நாடு எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது என்றும் சுற்றுலா துறை அமைச்சர் க. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தினை இன்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்: தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் தங்குமிடம் கட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்ப்பதற்கு சுற்றுலாத் துறை மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 

மேலும், தஞ்சாவூருக்கு தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். கடந்த 2018 - 19 ஆம் ஆண்டுகளில் 1.80 கோடி பேர் தஞ்சாவூருக்கு வந்தனர். இதே அளவில் 2019 ஆம் ஆண்டிலும் வருகை தந்தனர். அதன் பின்னர் கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. கடந்த ஆண்டு 65 லட்சம் பேர் வந்து சென்றனர். நிகழாண்டு கடந்த 4 மாதங்களில் 62 லட்சம் பேர் வந்துள்ளனர். எனவே நிகழாண்டு இறுதிக்குள் தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என கூறியுள்ளார்.

இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் கிடைக்கும் தொகை சாதாரண கடைகள், ஏழைகள், வழிகாட்டிகள், கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொடர்புடைய தொழில் செய்து வரும் அனைவருக்கும் சென்று சேர்கிறது,இதனால் தனி மனித வருவாய் உயர்கிறது எனவும் கூறியுள்ளார்.

பூம்புகாரில் ரூ. 203 கோடியிலும், பிச்சாவரத்தில் ரூ. 13 கோடியிலும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்திய அளவில் தமிழ்நாடு எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இயற்கையாகவே கோயில்களின் எண்ணிக்கை அதிகம். அனைத்து கோயில்களிலும் உள்ள கலை நுணுக்கங்கள் போன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழகத்திலுள்ள கோயில்களில் இருக்கும் சிற்பக்கலை போல வேறு எங்குமே பார்க்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் தீம் பார்க் அமைப்பதற்கு ஆய்வு செய்யப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில்தான் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழர்களின் கலை, பண்பாடு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.