ஜி.எஸ்.டி கவுன்சிலில் 'ஒரே மாநிலம், ஒரு வாக்கு' கொள்கை அடிப்படையில் குறைபாடுடையது என்று நீங்கள் எதிர்த்தீர்கள். வாக்களிப்பு மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
மாநிலங்கள் உருவாக்கிய அல்லது பங்களித்த அளவிற்கு, ஜிஎஸ்டி பங்கு விகிதாச்சார அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது தான் நியாயம் என்று நான் நினைக்கிறேன். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் போது விற்பனை மீது மாநில அளவிலான வரி விதிப்பை செய்ய எங்கள் ஒருதலைப்பட்ச உரிமைகளை தியாகம் செய்தது நாம் தான். ஜிஎஸ்டி கவுன்சிலில் தற்போதைய 'ஒரு மாநிலம், ஒரு வாக்கு' முறை நீக்கப்பட வேண்டும், நான் முன்வைத்த வழிகளில் விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் மாற்றப்பட வேண்டும். தற்போதைய முறை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு பல வழிகளில் அநீதி இழைக்கிறது.
திமுக அரசின் கீழ் கோவில் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் வெளிப்படைத்தன்மை குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இந்துகளுக்கு எதிரான கட்சி என வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு திமுகவின் பதில் இதுவா?
தொடக்கத்தில் இருந்தே இந்து சமய அறநிலையத்துறை திராவிட இயக்கத்தின் கீழ் இருந்த முக்கிய துறைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. கோவில் செயல்பாடு குறித்த புரிதல் இல்லாத யார் யாரோ வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 1910களில் இருந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் காலம் முதலே இத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நமது கலாச்சாரம், இனம் மற்றும் வரலாற்று அடையாளங்களை பற்றி அறிய இந்த கோவில்கள் நமக்கு மிக முக்கியம். எனது கொள்ளு தாத்தா எம் டி சுப்ரமணிய முதலியார் மற்றும் எனது தாத்தா பிடி ராஜன் அவர்கள் முக்கிய பங்கு வகித்த நீதிக்கட்சி மட்டுமல்லாமல், நமது அடையாளத்தின் அடிப்படையான இந்த பாரம்பரியத்தை கட்டிக்காப்பதில் திமுகவும் கவனம் செலுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு திமுக ஆட்சியில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைவர் கலைஞர் தான் திருவாரூர் தேரை ஓட வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். 2021இல் மட்டுமல்லாது, 1960கள் முதலே திமுக கோவில்களுக்கென சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நம்முடைய அடையாளத்தின் ஒரு பகுதியாக விளங்கும் கோவில்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். எங்கள் தலைவர் செயல்திறன் மிக்க அமைச்சர் திரு பிகே சேகர்பாபு அவர்களிடம் இத்துறையை அளித்து, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இத்துறைக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.
ஆக, ஒரு அரசியல் நோக்கத்துடனோ பாஜகவின் விமர்சனத்திற்கு பதிலடியாகவோ இதை செய்யவில்லையா?
பாஜக நிறுவப்படும் முன்னரே நாங்கள் கோவில்களை பாதுகாத்து வந்துள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை மசோதா 1920களில் மெட்ராஸ் மாகாணத்தில் ஆட்சி புரிந்த நீதிக்கட்சியால் கொண்டு வரப்பட்டது. 1920களில் பாஜக என்ற இயக்கம் கூட இருக்கவில்லை. ஆக, எதற்காக அதை செய்தோம்? நான் எடுத்துரைத்தது போல, எங்களது கொள்கைகளுக்காக இதை செய்தோம். மற்றவர்கள் கூறியதற்கு "பதிலடியாக" இதை செய்யவில்லை. ஒரு கட்சி அல்லது ஒரு நபருக்காக தான் அனைத்தும் நடக்கிறது என்று கூறுவது அவர்களின் தற்பெருமையையே காட்டுகிறது.