தமிழ்நாடு

”ஓபிஎஸ் -ன் மனைவியின் இறப்பில் சந்தேகம்; தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்” - அதிமுக மகளிர் அணி

Malaimurasu Seithigal TV

நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி அதிமுக கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்திய ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் எம்.பாலசந்திரன் தலைமையிலான அதிமுகவினர்  புகார் அளித்துள்ளனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பாலசந்திரன்  கூறுகையில்:-  

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொருட்படுத்தாமல் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் கட்சி கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் எனவும்,  இதனை  கண்டித்து தலைமை உறுப்பினர்கள் ஆலோசனையின் படி புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் ” திமுக தூண்டலின் பேரில் ஓபிஎஸ் தரப்பினர் கொடநாடு குறித்து பேசி வருகின்றனர். ஓபிஎஸ் அணி, திமுகவின் பீ-டீம் ஆக செயல்பட்டு வருகின்றது. இதற்கு இவர்கள் திமுக வின் கொடிகளையே பயன்படுத்திக்கொள்ளலாம்”,   என்று விமர்சித்தார்.

அப்போது,  செய்தியாளர்கள் புகாரில் ஒ.பி.எஸ் பெயர் குறிப்பிடவில்லை என்று எழுப்பிய கேள்விக்கு :- 
” ஒ.பி.எஸ் தரப்பினர் என்றால்  அவரையும் உள்ளடகியது தான் பொருள்”,  என்று விளக்கினார்.

அப்பொழுது அங்கிருந்த மகளிர் அணி செயலாளர் கோகிலா திடீரென  ஓபிஎஸ் -ன் மனைவியின் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததால் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.