சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் அறுவை சிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்து தீயில் பற்றி எரிந்து வருகின்றன. ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. தகவலறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் போராடி வருகின்றனர்.
அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரும் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்ட நிலையில் தீயில் சிக்கி காயமடைந்த 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தீயில் அறுவை சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த 20 ஆக்சிஜன் சிலிண்டர்களில் 4 சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தீயானது மருத்துவமனையின் பிற பகுதிகளுக்கு பரவி வருவதாகவும் அப்பகுதிகளில் உள்ள நோயாளிகள் தீயணைப்பு துறையினரால் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து நேரில் ஆய்வு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், தீ கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாகவும் விசாரணைக்கு பின் முழு தகவல்கள் அனைத்தும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், அனைத்து நோயாளிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், ராஜீவ் காந்தி மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், எஞ்சிய 3 கட்டிடங்களில் எந்த வித பாதிப்பும் இல்லை எனவும் கூறினார். இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறினார்.